Criado por மோகனப்பிரியா Chandran
mais de 6 anos atrás
|
||
நிறையுரை: ஆராய்ந்து பார்த்துச் செயலில் இறங்குக; தொடங்கியபின் எண்ணுவம் என்று சொல்வது தவறாம் என்பது பாடலின் பொருள். 'எண்ணுவம்' என்றால் என்ன? ஆராயாமல் முயற்சியை முதலில் தொடங்கிவிட்டு சிக்கல்களை அவ்வப்போது எதிர்கொள்ளலாம் என்ற மிகைநம்பிக்கை இழுக்காய் முடிந்துவிடும். ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னால் அதைப்பற்றி நன்றாகக் கலந்து எல்லாவற்றையும் தீர ஆலோசிக்க வேண்டும்; செயலைத் தொடங்கிவிட்டுப் போகப்போக எது வந்தாலும் அவ்வப்போது எதிர்கொள்ளலாம் என்பது கடியத்தக்க குற்றமாகிவிடும். எண்ணித் துணிக’ என்பதற்கு செயலை முடிக்கும் வழிகளை எண்ணித் தொடங்குக, செயலின் பயன் கருதித் தொடங்குக, முயற்சியை முடிக்க இயலுமா இயலாதா என்று எண்ணித் துணிக என பல திறமாக உரையாளர்கள் விளக்கினர். நினைத்த உடனேயே ஒரு செயலில் ஈடுபடக் கூடாது. ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது வலியறிந்து அதில் ஈடுபடவேண்டும். அதைச் செய்வதால் கிடைக்கும் பயன்கள், அதைச் செய்யும்போது ஏற்படக் கூடிய இடையூறுகள், அவ்வாறு தடைகள் நேர்ந்தால் அவற்றை நீக்குதற்குரிய வழிகள், அதே பயன் எய்த, உண்டான வேறு மாற்று செயல்கள் இவை அனைத்தையும் நன்கு எண்ணிப் பார்த்த பின்பே அதில் துணிய வேண்டும். அவ்வாறு சிந்திக்காமல் எண்ணிய உடனேயே செயலைத் தொடங்கிவிட்டுப் இடையூறுகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டால் பின்வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காண இயலாமல் போகலாம். அப்படியும் அந்தச் செயல் முடிக்கப்பட்டால் அதனால் பெற்ற பயன் எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் போதுமானதாயில்லாமல் போகலாம். அதுசமயம் இம்முயற்சி இழப்புகளை உண்டாக்கி, இகழவும்படும். நினைத்ததும் விரைந்து தொடங்கிவிட்டு பதற்றத்துடன் செயல் மேற்கொள்ளல் பயனுள்ள விளைவு பயக்காது. செயலில் இறங்கியபின் இடையூறுகள் வழியில் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பது அறிவுடைமையாகாது. 'எண்ணுவம்' என்றால் என்ன? எண்ணுவம் என்றது எண்ணிப் பார்க்கலாம் என்ற பொருள் தரும். 'வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்' என்று உலக வழக்கில் சொல்லப்படுவதையே எண்ணுவம் என்ற சொல் இங்கு குறிக்கிறது. ஒரு செயலை முதலில் தொடங்கி வைத்து விடலாம். பின்பு அதை எப்படிச் செய்யலாம் என்று ஆராய்வதே எண்ணுவம் எனப்படுகிறது. செயல் தொடங்கியபின் அது நிகழ்ந்து கொண்டிருக்கும்போது ஊடே புகுந்து நின்று இதை மாற்றி இப்படிச் செய்யலாமே என்று நினைக்கின்றது குற்றமாகும். இந்தப் பொறுப்பற்ற தன்மையை இழுக்கு என வள்ளுவர் அழைக்கிறார். இது தொடங்கிய முயற்சி வழி மாறிச் சென்று முரணாகித் தோல்வியில் முடிய வழி வகுக்கும். முன் எண்ணத் தக்கதைப் பின் எண்ணவேண்டாம் என்பது கருத்து. ஆராய்ந்து பார்த்துச் செயலில் இறங்குக; தொடங்கியபின் எது நேரிடினும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது தவறாம் என்பது இக்குறட்கருத்து.
Quer criar suas próprias Notas gratuitas com a GoConqr? Saiba mais.